இலங்கையில் கடந்த ஆட்சிகளில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பான 400 கோப்புகள் தூசுதட்டி எடுக்கப்படுகின்றன என அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்கா தெரிவித்துள்ளார்.
அனுரகுமாரா அதிபர் ஆனதும் இராஜபக்சே குடும்பத்தினர், மற்ற ஊழல் அரசியல்வாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தாமதம் ஏற்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று தங்காலையில் அவர் பேசினார்.
அப்போது, “ ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என எங்களைப் பார்த்து கேட்கப்படுகிறது. இதுதொடர்பாக 400 கோப்புகள்வரை உள்ளன. கொஞ்சம் போலீஸ்வசமும் மற்றவை குற்றப்புலனாய்வுத் துறையிடமும் மீதம் இலஞ்ச ஒழிப்புத் துறையிடமும் உள்ளன. இன்னும் சில முறையீடு அளவில்தான் உள்ளன. அவற்றைத் தூசுதட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறோம். விரைவில் அவற்றின் மீதான நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது யாரும் சிணுங்கக்கூடாது.” என்று அனுரகுமார திசநாயக்கா பேசினார்.