எதிர்வரும் 21ஆம்தேதியன்று நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அடுத்த இரண்டு நாள்களும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டிய மவுன காலம் என்பதால், எந்த வேட்பாளரும் இதை மீறக்கூடாது எனதேர்தல் ஆணைக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தற்காலிக அதிபர் இரணில் விக்கிரமசிங்கே சுயேச்சையாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா தேசிய மக்கள் சக்தி சார்பிலும், முன்னாள் பிரதமர்- அதிபர் மகிந்த இராஜபக்சேவின் மகன் நாமல் இராஜபக்சே இலங்கை பொதுமக்கள் முன்னணி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நான்கு பேரைத் தவிர மற்ற பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 39 பேர் போட்டியிடுகின்றனர்.
வடக்கு - கிழக்கு தமிழ்க் கட்சிகள், பொதுமக்கள் அமைப்புகளின் கூட்டியக்கமான தமிழ் பொதுக் கட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.
வெளியுலகுக்கு ஈழத்தமிழரின் இருப்பைக் காட்டுவதற்காக இவர் நிறுத்தப்பட்டிருக்கிறார் என வாக்குகள் கேட்கப்படுகின்றன. ஆனால், சிங்களக் கட்சியினர் எவரையும் ஆதரிக்காத இந்த முயற்சி ஈழத்தமிழரை குறுகிய வட்டத்துக்குள் தள்ளி பாதிப்பையே ஏற்படுத்தும் எனும் விமர்சனமும் கூறப்படுகிறது.
இன்று நள்ளிரவுடன் ஓயும் பிரச்சாரத்தை அடுத்து, எந்த வடிவத்திலும் வேட்பாளர்களோ அவர்களின் சார்பில் யாருமோ பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என இலங்கை தேர்தல்கள் ஆணைக் குழு தலைவர் ரத்நாயக்கா கறாராகக் கூறியுள்ளார்.
விதிமுறைகளை மீறும் ஊடகங்களுக்கு அதிகாரபூர்வமான முடிவுகளை வழங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.