தேர்தல்கள் ஆணைக் குழு, இலங்கை 
இலங்கை

வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்க 5 பேர்வரை மட்டுமே அனுமதி!

Staff Writer

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூறாவளியாக நடைபெற்றுவருகிறது. இத்துடன் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகளைத் திரட்டுவதும் நடக்கிறது. ஆனால் இதன் மூலம் பல முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதிkகப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இரத்நாயக்க இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், அதிகபட்சம் ஐந்து பேர்வரை மட்டுமே துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வீடுகளுக்கே சென்று வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரும் 11 முதல் 14 ஆம் தேதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற போதிலும் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டன.

வரும் 14ஆம் தேதிக்கு பிறகு வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி நிறுத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நான்கு நாள்களில் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறாதவர்கள் வரும் 18,19,20 ஆகிய தேதிகளில் தங்கள் பகுதிகளுக்குப் பொறுப்பான அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தங்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.