விஜித ஹேரத், இலங்கை அமைச்சர் KALINGU_ASHAN_PHOTOGRAPHY
இலங்கை

ஈழத்தமிழர் பிரச்னைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு- இலங்கை அரசு!

Staff Writer

இலங்கையில் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்னைக்கு புதிய அரசமைப்புச்சட்டத்தின் மூலமாகத் தீர்வு காணப்படும் என்று அந்நாட்டின் புதிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

புதிய அதிபராக அனுர குமார திசநாயக்கா பதவியேற்றதைத் தொடர்ந்து, அதிபர், பிரதமர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் ஆகியோரைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. 

அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், (ஈழத்தமிழர்களின்) இனப்பிரச்னைக்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலமே தீர்வு காணப்படும் என்றார். 

ஏற்கெனவே, இதைப் பற்றி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இனப்பிரச்னை மட்டுமல்லாமல் பல விவகாரங்கள் தொடர்பாகவும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக இலங்கையை ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி கூறிவருகிறது. ஆனால், புதிய அரசமைப்புத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவும், தேவையையொட்டி நாடளவில் பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். அதில், அரசாங்கம் முன்வைக்கும் கருத்து வெற்றிபெற வேண்டும். 

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் 196 பேர். மீதமுள்ள 29 பேர் கட்சிகள் பெறும் அதிக வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் முறை மூலம் எம்.பி.களாக ஆக்கப்படுவார்கள். இதில், இலங்கைத் தீவு முழுவதும் இப்போதைய அதிபர் அனுரகுமாரவின் கட்சிக்கு இவ்வளவுக்கு ஆதரவு வருமா, வரக்கூடிய கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்பதைப் பொறுத்தே அரசமைப்புச் சட்டத்திருத்தம் சாத்தியம் ஆகும்.