இலங்கையின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.வி. விக்கினேசுவரன், அரசியலில் குதித்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சராகவும் ஆனார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட்ட அவர், பின்னர் தமிழ் மக்கள் கூட்டணி எனும் தனிக் கட்சியைத் தொடங்கி, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.
வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதிபர் தேர்தலையொட்டி பொதுமக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடலாம் எனும் கருத்தும் வலுவாகியுள்ளது.
இந்த சூழலில், வரும் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் தன்னைப் போலவே மூத்தவர்கள் அடுத்த இளம் தலைமுறைக்கு வழிவிட்டு பொதுத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.