அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மும்முனைப் போட்டியாக அதிபர் இரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்கா ஆகியோர் இருந்துவந்த நிலையில், நான்காவதாகக் களமிறங்கினார், நாமல் இராஜபக்சே.
முன்னாள் அதிபரும் பிரதமருமான மகிந்த இராஜபக்சேவின் வாரிசான நாமல், சிங்களர் வாக்குகளைக் குறிவைத்து ஆதரவு திரட்டிவருகிறார். இனப்படுகொலைப் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கைப் படையினரைப் பாராட்டியும் அவர்களைப் பாராட்டும்விதமாகவும் அவர் பேசிவருகிறார்.
அந்நாட்டின் வடமேல் மாகாணத்தின் குருணாகல்- கல்கமுவ பகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாமல், இன்னும் ஒரு படி மேலே போய், தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தினர் மீதே போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பவுத்த கலாச்சாரத்தையும் மகாநாயக்கர்களையும் திட்டமிட்டு விமர்சிக்கும் செயற்பாடுகள் நடப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தன் சித்தப்பா கோட்டாபய இராஜபக்சே இடையில் அதிபராக இருந்தபோது, உரங்களை இறக்குமதிக்குத் தடைவிதித்து இயற்கை விவசாயத்துக்கு மாற உத்தரவிடப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்ட நாமல், அவர் ஒரு தரப்பினரின் ஆலோசனையைக் கேட்டு விவசாயத் துறையில் கோட்டாபய தவறாக முடிவு எடுத்தார் என்றும் அதனால் இரண்டுபோக விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டது என்றும் நாமல் இராஜபக்சே ஒப்புக்கொண்டார்.
தன் சித்தப்பாவின் மீதான பெரும் குற்றச்சாட்டை மறுக்காமல், நாமல் பேசியது அனுதாபத்தைப் பெறும் முயற்சிதான் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.