நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் செரியாபாணி என்கிற கப்பல் மூலம் பயணிகள் கடல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் கடல் சீற்றம், வானிலை, பயணிகள் குறைவு ஆகிய காரணங்களால் இடைக்காலமாக நிறுத்திவைக்கப்பட்டது.
பருவமழைக்குப் பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்ததாக, கடந்த மே 13ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் இந்த ஆண்டின் ஏழு மாதங்கள் கடந்தும் நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கைக்கு இயக்கப்படவுள்ள ‘சிவகங்கை’ எனும் பயணிகள் கப்பல், பராமரிப்பு, பழுபார்ப்புப் பணிகளுக்குப் பின் நேற்று அந்தமானிலிருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தக் கப்பல் சோதனையோட்டமாக நாளை நாகையிலிருந்து வட இலங்கையின் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இயக்கப்படும்.
இந்தப் போக்குவரத்துக்காக இந்திய அரசு சார்பில் இலங்கை அரசுக்கு ஓராண்டு காலத்துக்கு மாதத்துக்கு இலங்கை பணத்தில் ரூ.2.5 கோடி நாகை துறைமுகத்தில் இயக்கச்செலவுகளுக்காக வழங்கப்படும். இத்துடன், முன்னதாக இந்தப் பயணத்துக்கு ஏற்ப போரால் உருக்குலைந்திருந்த காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீர்செய்ய 6.37 கோடி அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது.
அடுத்த வாரம் முதல் வழக்கமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் அறுபது கி.கி.வரை பார்சலும் தனி ஒருவர் 5 கி.கி. எடைவரை பொருட்களையும் கொண்டுசெல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு பயணக் கட்டணமாக இந்திய ரூபாயில் சுமார் 4,920 வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் விமான சேவை அண்மையில் தினமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படகு சேவை தொடர்ந்தால் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்கள் உட்பட்ட மையத் தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் அதிக செலவில்லாமல் யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவர முடியும்.