இலங்கையின் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பயணிகள் கப்பல் சேவை நேற்று தொடங்கியது. முன்னதாக, நேற்று காலை 10 மணிவாக்கில் தொடங்குவதாக இருந்த படகுப் பயணம் இரண்டு மணி நேரம் கழித்தே தொடங்கியது.
நல்ல நேரம் பார்க்கப்பட்டு இராகு காலம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்கு நாகையிலிருந்து புறப்பட்ட சிவகங்கை எனும் கப்பல், மாலை 4.15 மணிக்கு யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.
இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உட்பட 41 பேர் அதில் பயணம் செய்தனர். அவர்களை யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் தூதர் உட்பட்ட குழுவினர் வரவேற்றனர்.
மறுமார்க்கத்தில் இன்று காலை 10 மணிவாக்கில் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது.
நாளை ஞாயிற்றுக்கிழமை 18ஆம்தேதி முதல் நாகையில் காலை 8 மணிக்குக் கிளம்பி காங்கேசன்துறையை 12 மணிக்குச் சென்றடையும் என்றும் மறுமார்க்கத்தில் அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரிமியம் இருக்கைகள் என 150 இருக்கைகள் உள்ளன.
சாதாரணக் கட்டணம் இந்தியப் பணத்தில் ரூ.5ஆயிரம், பிரிமியம் ரூ.7,500.
ஒவ்வொருவரும் 25 கிலோ. எடையுள்ள பொருட்களை எடுத்துச்செல்ல முடியும்.
பயணத்தில் கட்டணம் செலுத்தி சாம்பார், தயிர்ச் சாப்பாடு, நூடுல்ஸ் உணவுவகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.