இரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அதிபர் 
இலங்கை

இலங்கை அதிபர் தேர்தல்- ’ரா’ உளவு அமைப்பு சொன்ன தகவல்!

Staff Writer

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாதான் வரும் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவார் என இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பு ரா கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கே இதை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

இப்போதைய அதிபர் இரணில் விக்கிரம்சிங்கே தலைமையிலான நாட்டை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து, சஜித் உருவாக்கியதுதான் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே எம்.பி.யாக இருந்த இரணில் சூழல் காரணமாக அதிபராகிய நிலையில், தன்னுடைய முன்னாள் கட்சி எம்.பி.களின் ஆதரவை இரணில் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டு வருகிறார்.

ஐ.ம.க. எம்.பி.கள் சிலரை அவர் அமைச்சராகவும் ஆக்கியதால், அதைப்போல இப்போது எம்.பி.களுக்கு நிதியையும் ஒதுக்குகிறார் என்றும் இரணில் மீது ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது.

தற்போதைய நிலையில் இரணில் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறார் என்றும் இராஜபக்சேகளின் மொட்டு கட்சி ஆதரவு இல்லாவிட்டால் நான்காவது இடத்துக்குத் தள்ளப்படுவார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கே கூறினார்.

இதனிடையே, தனக்கு எதிராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவும், ஜே.வி.பி.சார்ந்த தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமாராவும் தன்னுடன் இணையவேண்டும் என்று கம்பகாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரணில் விக்கிரமசிங்கே பகிரங்க வேண்டுகொள் விடுத்தார்.