இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அரியநேத்திரன் நேற்று தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
நேற்று காலையில் தந்தை செல்வாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர் மரியாதை செய்த அரியநேத்திரனுடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் ஐங்கரநேசன் முதலிய கட்டமைப்பு பிரமுகர்கள் உடனிருந்தனர்.
அதையடுத்து, நல்லூர் கந்தசாமி கோயிலில் வழிபட்டு, நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து ஆசிபெற்றார்.
பின்னர், கிறித்துவ ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, ஆயர்களிடம் ஆசிபெற்றார்.
பிற்பகல் 3 மணியளவில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அங்கு சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் முதலிய பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர், முல்லைத்தீவு, வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் முதல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெலோ செல்வம் அடைக்கலநாதன், பிளாட் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் எம்.பி. சிவசக்தி ஆனந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், செயலாளர் துளசி, மக்கள் பொதுச்சபை தரப்பில் ஆய்வாளர்கள் நிலாந்தன், யதீந்திரா உடபட பலரும் பங்கேற்றனர்.