“இந்திய கிரக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார். அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்.” என யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகிராஜ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 17 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அவர், 2007 இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் 2011இல் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையையும் இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இருப்பினும் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். 2017ஆம் ஆண்டு அனைத்துவித போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முடிவுகளில் தோனியின் செல்வாக்கு அதிகரித்ததன் காரணமாகவே, யுவாரஜ் சிங்கின் சரிவு தொடங்கியது என்கிறார் யுவராஜின் தந்தை யோகிராஜா சிங்.
இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
“இந்திய அணிக்காக இன்னும் நான்கைந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார் யுவராஜ் சிங். அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்து விட்டார். அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்தான். ஆனால் அவர் என் மகனுக்கு எதிராக செய்ததெல்லாம் இப்போது வெளிவரத் தொடங்கிவிட்டது.
யுவராஜ் சிங் போல மற்றொரு வீரர் கிடைக்க மாட்டார் என கம்பீர், சேவாக் போன்றோர் கூறியுள்ளனர். புற்றுநோயுடன் விளையாடி நாட்டிற்காக உலகக் கோப்பையை வென்றதற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.” என்றார்.