சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா 
விளையாட்டு

‘என்ன வரவேற்க நிறைய பேர் வந்திருக்காங்க.. சந்தோஷமா இருக்கு’! - பிரக்ஞானந்தா

Staff Writer

உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றார்.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியர், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளர் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

இந்நிலையில், அஜா்பைஜானில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரக்ஞானந்தாவுக்கு மலர் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது செந்தியாளர்களிடம், ”என்ன வரவேற்க நிறைய பேர் வந்திருக்காங்க.. சந்தோஷமா இருக்கு..” என்றார் பிரக்ஞானந்தா.

தொடர்ந்து, திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 30 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் - பிரக்ஞானந்தா சந்திப்பு நிகழும் என கூறப்படுகிறது.