ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49 சதம்) சாதனையை விராட் கோலி (50 சதம்) முறியடித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த சுப்மன் கில் திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தற்காலிக ஓய்வாக பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, ஷ்ரேயஸ் ஐயர் புதிய பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார்.
அதே நேரம், ரோகித்துக்குப் பின் களமிறங்கிய விராட் கோலி தன் சிறப்பான ஆட்டத்தால் 72ஆவது அரை சதத்தைப் பதிவு செய்தார். பின்னர் நிதானமாக ஆடி 108 பந்துகளில் 100 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதத்தை முறியடித்து தன் 50-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. அப்போது மைதானத்திலிருந்த ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். இறுதியாக விராட் கோலி 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விரட் கோலி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக அரை சதங்கள் (50), அதிக ரன்கள் (674) அடித்த வீரர் என்ற இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.