பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இன்று காலை தில்லியில் வந்திறங்கினார். சக மல்யுத்த வீரர்களும் விளையாட்டு ரசிகர்களும் ஊரார் உறவினர்களுமாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் வினேஷ் போகத் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
தனக்குக் கிடைத்த வரவேற்பில் திக்குமுக்காடிப் போன வினேஷ் போகத், “நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு அதிர்ஷ்டக்காரி.” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
அரியானாவைச் சேர்ந்த 29 வயது வினேஷ் போகத், உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குச் சென்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி அமெரிக்காவின் சாராவை வினேஷ் எதிர்கொள்ள இருந்தநிலையில், அவருக்கு 100 கிராம் எடை கூடுதலாக இருக்கிறது எனக்கூறி, அவரைத் தகுதியிழப்பு செய்வதாக ஒலிம்பிக் குழு அறிவித்தது.
அதையடுத்து கடந்த 8ஆம் தேதியன்று மல்யுத்த விளையாட்டிலிருந்தே தான் விலகுவதாக வினேஷ் அறிவித்தது, இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஒலிம்பிக் குழுவின் முடிவை எதிர்த்து, இருவருக்கு கூட்டாக வெள்ளிப்பதக்கம் வழங்கவேண்டும் என மேல்முறையீட்டுக்குச் சென்றவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, இன்று காலையில் பிரான்சிலிருந்து வினேஷ் போக்த் தில்லி விமானநிலையத்தில் வந்திறங்கினார்.
ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்கத் திரண்டனர். அவர்களுடன் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தீபிந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர்கள் புஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் ஆகியோரும் அவரை வரவேற்றனர்.
வினேசின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் விமானநிலையத்தின் வெளியில் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவற்றையெல்லாம் பார்த்த வினேஷ் போகத்தின் தாய் பிரேம்லதா, “ எங்கள் கிராமத்திலிருந்தும் சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் என் மகளை வரவேற்க வந்திருக்கிறார்கள். அவளைச் சிறப்பிக்க இருக்கிறோம். அவள் என்னைப் பொறுத்தவரை ஒரு சாம்பியன் தான். தங்கப் பதக்கத்தைவிட இந்த நாடு பெரிய கௌரவத்தைச் செய்திருக்கிறது.” என்று பெருமிதப்பட்டார்.