பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
நேற்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபாவின் குஸ்மானை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்று வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு நுழைந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
29 வயதான அவர் இந்தியாவுக்காக காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர். அவரின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
கன்னத்தில் விழுந்த அறை
மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் அப்போதைய பாஜக எம்பியுமான பிரிஜ் புஷன் வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இன்னல்களை வினேஷ் போகத் சந்தித்தார்.
இந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று ஒலிம்பிக்கில் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை வினேஷ் உறுதி செய்து இருக்கிறார்.
இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள சக வீரரான பஜ்ரங் பூனியா, நாங்கள் போராட்டம் நடத்தியதை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி கொச்சைப்படுத்தியது
எதிர்க்கட்சியின் தூண்டுதலால் நாங்கள் போராடினோம் என்று கூறினார்கள். நாங்கள் வென்ற பதக்கங்கள் 15 ரூபாய்க்கு கூட தேறாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள். மேலும் எங்களை ஜாதி ரீதியாக பிரித்து பேசினார்கள். தற்போது, எங்கள் வினேஷ் போகத் பதக்கத்தை வென்று இருக்கிறார். எங்களை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் வினேஷ் போகட்டுக்கு பாராட்டை தெரிவிப்பார்களா?
நாங்கள் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றெல்லாம் எங்கள் மீது பழி சுமத்தினார்கள். எங்கள் மீது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் தற்போது வினேஷ் போகத் தான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை ஆவார். அவருடைய சாதனைகளில் ஒலிம்பிக் பதக்கம் மட்டும்தான் இல்லாமல் இருந்தது.
தற்போது அவர் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வென்று வருவார். அது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணிக்கும் பிரிஜ் பூசனுக்கும் விழுந்த அடியாக தான் நான் பார்க்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று வந்த பிறகு அவர்கள் எப்படி எங்கள் கண்களைப் பார்த்து பேசுவார்கள் என்றும் பஜ்ரங் பூனியா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய சாக்ஷி மாலிக், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய கனவை வினேஷ் போகத் நிறைவேற்றி இருப்பதாக பாராட்டியுள்ளார்.