இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐ.சி.சி. உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இந்த சூழலில், இலங்கையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரோஷன், “கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அவ்வாறு நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்.” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதவியிலிருந்து ரோஷனை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைக்குமாறும், இல்லாவிட்டால், தனது கட்டுப்பாட்டின் கீழ் விளையாட்டுத் துறை வருமாறு புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.