ப்ரீத்தி பால் 
விளையாட்டு

பாராலிம்பிக்ஸ்: 2 ஆவது வெண்கலம் வென்று அசத்திய ப்ரீத்தி பால்!

Staff Writer

மகளிருக்கான 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் ப்ரீத்தி பால் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ப்ரீத்தி பால். இவர் நேற்று நடந்த மகளிருக்கான 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில், 200 மீட்டர் தூரத்தை 30.01 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். தங்கப் பதக்கத்தை சீன வீராங்கனை வென்றிருந்தார். மகளிர் 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 30 அன்று நடந்த மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) 23 வயதான ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இப்போது 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

T35 பிரிவு என்றால் என்ன?

பாராலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயத்தில் T35 பிரிவு ஹைபர்டோனியா, அட்டாக்ஸியா, பெருமூளை வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவின் நிஷாத் குமார் ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இத்துடன் நடப்பு பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 27ஆவது இடத்தில் உள்ளது.

71 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 43 பதக்கங்களுடன் பிரிட்டன் 2வது இடத்திலும், 27 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram