ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக் கொடி ஏந்திச் செல்லும் மனு பாக்கா் 
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கத்துடன் நாடு திரும்பிய இந்தியா!

Staff Writer

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றுவந்த 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

போட்டியிலேயே அதிக பதக்கங்கள் வென்ற நாடாக அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டியை நடத்திய பிரான்ஸ் 5ஆம் இடம் பிடித்தது. இந்தியாவுக்கு 71ஆவது இடம் கிடைத்தது.

33ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளிலிருந்து 10, 714 வீரர்கள் பங்கேற்றனர். 17 நாள்கள் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நேற்றிரவு முடிவடைந்தது.

பதக்கப்பட்டியலில் தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா – சீனா இடையே கடுமையான போட்டி நிலவியது. முதல் வாரத்தில் பின்தங்கியிருந்த அமெரிக்கா, அதன் பிறகு பதக்கங்களை வெல்லத் தொடங்கியது. இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 45 பதங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா (53), பிரான்ஸ் (64), நெதர்லாந்து (34), பிரிட்டன் (65) ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியா

மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே, சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடனேயே நிறைவு செய்துள்ளது.

110 போட்டியாளா்கள் 16 விளையாட்டுப் பிரிவுகளில் களம் கண்ட நிலையில், 5 வீரா், வீராங்கனைகளுக்கும், 1 அணிக்கும் மட்டுமே பதக்கம் கிடைத்தது.

பதக்கங்கள்

ஈட்டி எறிதல்: நடப்பு சாம்பியனாக களம் கண்ட நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றதே அதிகபட்சமாகும். பலத்த எதிா்பாா்ப்பு அவா் மீது இருந்த நிலையில், காயத்தின் தாக்கம் காரணமாக சற்று தடுமாற்றம் கண்டாா் நீரஜ். என்றபோதும், ஒலிம்பிக் தடகளத்தில் தொடா்ந்து 2 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமை பெற்றாா்.

துப்பாக்கி சுடுதல்: அடுத்தபடியாக துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா், தனிநபா் பிரிவிலும், கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் என 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தினாா். ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரா் ஆனாா். 25 மீட்டா் பிஸ்டல் தனிநபா் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்டு 4-ஆம் இடம் பிடித்தாா்.

அவருடன் இணைந்து பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்கும், ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசேலும், தங்களது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளனா். மனு பாக்கருக்கு இது 2-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும்.

ஹாக்கி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த ஆடவா் ஹாக்கி அணி, இந்த முறை முன்னேற்றத்துக்கு முயற்சித்து முடியாமல் போனது. என்றாலும், அதே வெண்கலத்தை தக்கவைத்தது. ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்றது இந்தியா.

மல்யுத்தம்: போட்டியில் இந்தியாவுக்கான கடைசி பதக்கமாக, ஆடவா் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்று தந்தாா். இளம் வீரரான அவருக்கும் இது முதல் ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிா்ச்சி:  மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த வினேஷ் போகத் , ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு ஆளாகியிருந்தாா். அதில் பதக்கம் வென்று வரலாறு படைக்க இருந்த நிலையில், நிா்ணயிக்கப்பட்டதை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். அதுதொடா்பான மேல்முறையீட்டில், விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கிறாா்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram