ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடத்தும் அளவுக்கு சென் நதி தூய்மையாக இருக்கிறது என்பதை நிரூபிக்க பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ நதியில் இறங்கி நீச்சலடித்து காட்டினார்.
பிரான்ஸின் வடக்குப் பகுதியில் 777 கிலோ மீட்டா் நீளம் ஓடி கடலில் கடக்கும் சென் நதி, பாரிஸ் நகரின் ஊடாகவும் கடந்து செல்கிறது.
பாரீஸ் நகர வடிகால் கட்டமைப்பு கழிவு நீரும் வெள்ள நீரும் ஒன்றாக செல்லும்படி உள்ளது. இதனால், கன மழை பொழியும்போது, வடிகால் கட்டமைப்பு நிறைந்தால், வெள்ள நீரானது கழிவு நீருடன் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்வதற்குப் பதிலாக நேரடியாக சென் நதியில் கலக்கிறது.
இதனால், நதி நீரில் ‘இ. கோலி’ பாக்டீரியா, பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பதால், அந்த நீரில் நீச்சல் பந்தயம் நடத்துவது தொடா்பாக விவாதங்கள் எழத் தொடங்கின.
இதை சரிசெய்யும் முயற்சியாக 1.5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்து, கட்டமைப்புகளை மேற்கொண்டுள்ளது பாரிஸ் நிர்வாகம்.
நதி நீரில் தினமும் தர ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், ‘இ. கோலி’ பாக்டீரியாவின் அளவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நதி நீா் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அந்த நதியில் நீந்தப் போவதாக பாரீஸ் நகர மேயா் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அவா் நேற்று சென் நதியில் நீந்தினார். நீா் தூய்மையாக இருப்பதாக அவா் பின்னர் தெரிவித்தார். முன்னதாக, இதேபோல் பிரான்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சர் எமிலி அவ்தா காஸ்ட்ராவும் கடந்த சனிக்கிழை இதேபோல் சென் நதியில் நீந்தினார். சென் நதியில் நீந்துவதற்கு 1923 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நல்லவேளை சென்னையில் ஒலிம்பிக் நடத்தல... இல்லன்னா கூவத்தில் நீச்சலடித்துக் காட்ட சொல்லி இருப்பாங்க... என்று யாருடைய மைண்ட் வாய்ஸோ கேட்கிறது!