பாராலிம்பிக்ஸ் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதேஷ்குமார், ஈட்டி எறிதலில் சுனில் அன்டில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். தமிழக வீராங்கனைகள் துளசிமதி வெள்ளிப்பதக்கமும் மனிஷா வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-ஆவது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 6ஆவது நாளான நேற்றைய தினம் இந்திய வீரர்கள் பதக்கங்களை அள்ளிக் குவித்தனர். முதலாவதாக, வட்டு எறிதல் எப் -56 இறுதிப்போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து, பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் (எஸ்.எல். 3பிரிவு) இந்தியாவின் நிதேஷ்குமார் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
பேட்னிண்டனில் எஸ்.எல். 4பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் பிரான்ஸ் நாட்டின் லுகாஸ் மஜூரிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் சுமித் அன்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கான தங்கப் பதக்கம் 3 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய இறுதிப் போட்டியில், இந்தியாவின் சுமித் 70.59 மீட்டர் நீளத்துக்கு எறிந்து தனது முந்தைய சாதனைகளை அவரே உடைத்துள்ளார்.
முதல் முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்
பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில் மனிஷாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த துளசிமதி முருகேஷன் தங்கப்பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் கியூஸியா யங்கை எதிர்த்து விளையாடினார்.
தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட துளசிமதி, 17-21, 10-21 என்ற நேர்செட்டில் தோற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீரர் மனிதா டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசென் கிரினை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தமிழக வீரர்கள் இருவரும் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. இவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்படப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.