பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் திருவிழாவில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் உற்சாகமாகப் பங்கேற்று சிறப்பாக தங்கள் திறனை வெளிப்படுத்திவருகின்றனர். இன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதிச் சுற்றில் முதல் குழுவில் கிசோர் ஜெனாவும் இரண்டாம் குழுவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார்கள்.
தகுதிச் சுற்றில் 84 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறியவேண்டும் என விதிக்கப்பட்ட நிலையில், கிசோர் ஜெனா 80.73 மீட்டர் தொலைவுக்கு வீசியதில் அவரால் தகுதிச் சுற்றை வெல்ல முடியவில்லை.
ஆனால், அடுத்த குழுவில் வந்த நீரஜ் சோப்ரா இன்ப அதிர்ச்சி அளிக்கும்படியாக, ஒரேயடியாக 89.34 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து அரங்கை அதிரவைத்தார்.
நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளைகொண்டார்.