மோர்னே மோர்கல் 
விளையாட்டு

இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்...பார்ட்னரை உள்ளே இழுத்த கம்பீர்!

Staff Writer

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை தேர்வு செய்தது பிசிசிஐ. அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த பாராஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான், லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்து பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயிற்சியாளராக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அனுபவம் வாய்ந்த வீரரான மோர்கல், தென்னாப்பிரிக்க அணிக்காக 86 டெஸ் போட்டிகளில் விளையாடி, 309 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 117 ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுகளையும் 44 டி20 போட்டிகளில் 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சாளராக மோர்கலை நியமிக்க வேண்டும் என கவுதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார். அவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சேர்ந்து பணியாற்றினர். லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியில் கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது மோர்க்கல் அங்கு பணியாற்றினார். இந்நிலையில், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.

மேலும், துணை பயிற்சியாளர்கள் தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram