விராட் கோலி,ரோகித் சர்மா 
விளையாட்டு

டி20 ஓய்வை அறிவித்த கோ-ரோ!

Staff Writer

அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஜாம்பவான்களாக இருந்து வந்த விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா இருவரும், சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் விராட் கோலி. ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், விருதை பெற்ற பிறகு பேசுகையில், எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி டி20 உலகக் கோப்பை. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. என்றாா்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணிக்காக எனது கடைசி டி20 போட்டி இதுதான். இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், இருவரும் தொடர்ந்து ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து குல்தீப் யாதவ், அஸ்வின் போன்ற சில வீரர்களும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விராட் கோலி

கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் கோலி. இதுவரை 125 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 4,188 ரன்கள் எடுத்துள்ளார். 38 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசியுள்ளார்.

ரோகித் சர்மா

2007ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார் ரோகித் சர்மா. மொத்தம் 159 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித் சர்மா, 4231 ரன்களைக் குவித்துள்ளார். அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல, 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல்லுடன் சேர்ந்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.

200 சிக்சர்கள் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனை மட்டுமல்லாமல், 205 சிக்சர்களுடன் முதலிடத்திலும் உள்ளார்.