இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தொடரில் தமிழ்நாடு அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
ஐ.பி.எல் பாணியிலான டி20 ப்ரீமியர் லீக் போட்டிகளுக்கு சவால்விடும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் T10 என்ற பெயரில் 10 ஓவர்களுக்கான கிரிக்கெட் தொடர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் T10 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தும் பொருட்டு இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ISPL T10 - Indian Street Premier League) என்ற தொடரை CCS Sports LLP எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் தொடரின் ஆலோசகராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உள்ளூர் அளவில் நல்ல திறமையோடு இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்து இந்தத் தொடரை நடத்த இருக்கின்றனர். இந்தத் தொடருக்கான அறிமுக நிகழ்வு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில்தான் இந்தத் தொடரும் நடைபெறும். ஆனால், இந்தத் தொடரில் டென்னிஸ் பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். வருகிற மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை மொத்தம் 19 போட்டிகள் நடைபெறவிருக்கிறது.
மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஸ்ரீநகதர் என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.
மும்பை அணியை அமிதாப் பச்சனும் ஹைதராபாத் அணியை ராம் சரணும் ஸ்ரீநகர் அணியை அக்சய் குமாரும் பெங்களூர் அணியை ரித்திக் ரோஷனும் வாங்கியிருக்கின்றனர்.
அந்த வரிசையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.