பிரான்சில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் ஆக்கி போட்டியில், இந்திய அணி இன்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதுவும் 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பெருமையையும் பெற்றுள்ளது.
முன்னதாக, பெல்ஜியம் அணியுடன் ஆடி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் சோர்ந்துபோனார்கள்.
அந்தச் சோர்வை நீக்கும்படியாக இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில், ஆட்டம் தொடங்கிய 12ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தார், இந்திய வீரர் அபிசேக். அடுத்து 13ஆவது நிமிடத்தில் பெனால்டி கானர் முறையில் அணித்தலைவர் ஹர்மன்பிரீத் சிங் இரண்டாவது கோலை அடித்தார்.
அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியா 2-1 என செக் வைத்தது.
மூன்றாம் சுற்றில் ஹர்மன் மீண்டும் ஒரு கோலை அடிக்க, நான்காவது சுற்றில் ஆஸ்திரேலியா ஒரு கோல் எடுக்க, மொத்தத்தில் 3-2 எனும் கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.
இதன் மூலம் இந்திய ஆக்கி அணி கால் இறுதிக்கு முன்னேறுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.