வெற்றிவாகை சூடிய இந்திய அணி 
விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா!

Staff Writer

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வென்றது மூலம் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீசத் தீா்மானித்தது. இந்திய பேட்டிங்கில் இஷான் கிஷண் - ஷுப்மன் கில் பாா்ட்னா்ஷிப், முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 143 ரன்கள் சோ்த்தது.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 85, கிஷண் 77, ஹர்திக் 70, சஞ்சு சாம்சன் 51 ரன்கள் எடுத்தனர்.

கடின இலக்கை விரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் முகேஷ் குமாரின் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகினர். 35.3 ஓவர்களிலேயே 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக குடாகேஷ் மோட்டி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் ஷர்துல் தாகூர் 4, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது.