இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றிக்கனியைப் பறித்து இந்தியா டி20உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் தணிந்தது. ஐசிசி கோப்பைகளில் இந்திய அணி கைவைத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிற ஏக்கம் தணிந்தது.
பார்படோஸில் இன்று நடந்த டி20உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கடந்த இரு ஆட்டங்களில் கலக்கிய ரோகித் இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தியே அவுட் ஆனார். ரிஷப் பந்த், சூரியகுமார் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணி தடுமாறியது. கோலியும் அக்சர் பட்டேலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இ ந்த தொடர் முழுவதுமே சரியாக ஆடாத கோலி மெதுவாக ஆடி அரை சதம் அடித்தார். அதன் பின்னர் அடித்து ஆடி 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். சிவம் துபே கொஞ்சம் கைகொடுக்க, கடைசியில் ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தனர்.
இது போதுமா என்ற கவலையுடன் பந்துவீச்சைத் தொடங்கியது இந்தியா. ஐந்து பந்துகள் ஆடிய நிலையில் ரீசா ஹெண்ட்ரிக்சின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். டிகாக், ட்ரிஸ்ட்ன் ஸ்டப்ஸ் ஆகியோர் அடித்து ஆடினாலும் கிளாஸன் வெறித்தனமாக ஆடினார். 26 பந்துகளில் அவர் 50 ரன்கள் குவித்ததும் இந்தியா மூட்டை கட்டவேண்டியதுதான் என்ற நிலை. குல்தீப், அக்சர், ஜடேஜா என ஸ்பின்னர்கள் நன்கு அடிவாங்கினர்.
அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய வைடாகச் சென்ற பந்தைத் தொட்டு கிளாசன் அவுட் ஆனார். ஆனால் அவருடன் இருந்தவர் மில்லர். எந்த ஸ்கோரையும் விரட்டிப் பிடிப்பவர். ஒர் கட்டத்தில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரின் பந்துவீச்சால் கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுக்கவேண்ட்ய நிலை உருவானது. இருந்தாலும் மில்லர் இருந்தார்.
19 வது ஓவரின் முதல் பந்து. ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் தூக்கி அடித்தார். அது சிக்ஸர்தான். ஆனாலும் அங்கே நின்ற சூரியகுமார் அதை லாவகமாகப் பிடித்து உள்ளே வீசிவிட்டு வெளி கால் வைத்துவிட்டு திரும்ப உள்ளே வந்து பிடித்துவிட்டார். யாரும் சுத்தமாக எதிர்பார்க்காத திருப்புமுனை. அத்துடன் அதே ஓவரில் ரபாடாவை அவுட் ஆக்கி, இந்தியா கோப்பையைத் தட்டித் தூக்கியது.
2007-இல் தோனி தலைமையில் இந்திய அணி முதல் டி20 கோப்பை வென்ற போது அந்த அணியின் இளம் உறுப்பினர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இப்போது கேப்டனாக இந்த கோப்பையை வெல்கிறார். உண்மையில் அரிய தருணம்.
விராட் கோலிக்கு ப்ளேயர் ஆப் தி மேட்ச் விருது. அவர், ‘இது இந்திய அணிக்காக என்னுடைய கடைசி டி20 ஆட்டம். நாங்கள் சாதிக்க விரும்பியது இதுவே. இனி புதிய தலைமுறை பொறுப்பேற்கும்’ என்றார்.
கோலியின் கடைசி ஆட்டம். டிராவிட் கோச்சாக இருக்கும் கடைசி நாள். வெற்றிக் கோப்பையை தூக்குவதற்கு இதை விட சிறந்த தருணம் ஏது?