மேற்கிந்தியத் தீவுகள் அணி 
விளையாட்டு

தொடரை இழந்த இந்தியா: மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி!

Staff Writer

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 5 ரன்களும், ஷுப்மன் கில் 9 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அதன் பின்பு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் கைகோர்த்தனர். இருவரும் நன்றாக விளையாடி வந்த நிலையில் திலக் வர்மா 27 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களம் வந்த சாம்சன் 13 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 61 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேற, அடுத்து வந்த பேட்டர்கள் யாரும் நிலைக்கவில்லை.

இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அகேல் ஹொசின், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்களும், ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 10 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த நிகோலஸ் பூரான், பிராண்டன் கிங்குடன் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதை நோக்கி நகர்த்தினர்.

12.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆடிக்கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு வானிலை சரியானதால் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. நன்றாக விளையாடி வந்த பூரான் 4 சிக்சர்கள், 1 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின் ஷாய் ஹோப், பிராண்டன் கிங்குடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடி காட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 ஒவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், ஷாய் ஹோப் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது. ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார். மேலும், இந்த தொடரில் 176 ரன்கள் விளாசிய நிகோலஸ் பூரான் தொடரின் நாயாகனாக தேர்வானார்.