விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 175 ரன்கள் முன்னிலை!

Staff Writer

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 80 ரன்களிலும், ஷுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களும், கே.எல்.ராகுல் 86 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரீகர் பரத் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் மற்றும் ரீகன் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தைக் காட்டிலும் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.