வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ஓவர் மீதம் வைத்து எளிதில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக வென்றது.
இந்தநிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று இரவு 7 மணிக்கு குவாலியரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 35 ரன்களும், கேப்டன் ஷண்டோ 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக், மயாங் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்துவந்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிரடியைத் தொடர ஸ்கோர் எகிறியது. சூர்யகுமார் யாதவ் 29 ரன்களுக்கு வெளியேறினார். நிதானமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் 29 அவுட்டானார்.
இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். நிதீஷ் குமார் 16 ரன்களுடனும், ஹார்திக் பாண்டியா 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 பேட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.