இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 3ஆவது டி20 போட்டியில் இந்தியா பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. வங்கதேச அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை 3 - 0 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியா – வங்கதேச அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளின் 111 ரன்கள் அடித்து இருந்தார். அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டிலேயே இது இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். வங்கதேச அணிக்கு 298 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதை நோக்கி ஆடத் துவங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ். அவர் வீசிய முதல் பந்தில் தொடக்க வீரர் பர்வேஸ் உசைன் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களில் லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹிருதோய் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர் வரை நின்று ஆடிய தவ்ஹீத் 42 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து இருந்தார்.
வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே சேர்த்து 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த டி20 தொடரை 3 - 0 என வென்று வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.