நரேந்திர மோடி மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு! 
விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான்: நரேந்திர மோடி மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Staff Writer

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தையொட்டி, அகமதாபாத் மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் இருவரை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது. இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக இந்திய அணியை வீழ்த்தவேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி உள்ளது. அதேசமயம், 8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். இதனால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அத்துடன், இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வருகின்றனர். மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களின் முன்னிலையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

இதனால், நரேந்திர மோடி மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்காக குஜராத் முழுவதும் 6 ஆயிரம் காவலர்கள், தேசிய பாதுகாப்புப் படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நரேந்திர மோடி மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ரசிகர்களுக்கான பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அகமதாபாத் காவல் துறை அனுமதிக்கக் கூட்டாது என்று குஜராத் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.