ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இப்போட்டியைக் காண குறைந்த அளவு ரசிகர்களே வந்தனர். பார்வையாளர் மாடம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
மொத்தம்1,32,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட மைதானம் காற்று வாங்குவதாக சமூக ஊடகங்களில் கண்டபடி வெளுத்து வாங்கிவருகின்றனர்.
உலகக் கோப்பையின் முதல் போட்டியைக் காண அதிகமான ரசிகர்கள் வராததற்கு ஆறு காரணங்களே முக்கியம் என்று கூறப்படுகிறது.
அவை என்னென்ன?
1. போட்டியானது 2 மணிக்குத் தொடங்குவதால், அப்போது வெப்பநிலையானது 33 டிகிரியிலிருந்து 34 டிகிரி செல்சியஸ். வெயில் காரணமாக ரசிகர்கள் போட்டியைக் காண தவிர்த்திருக்கலாம். இரவு நேரப் போட்டியாக இருந்திருந்தால் ரசிகர்கள் அதிக அளவில் வந்திருப்பார்கள்.
2. மேலும், வேலை நாளில் போட்டி நடப்பதாலும், அலுவலக நேரத்தில் போட்டி தொடங்கியதாலும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு இன்னொரு காரணம்.
3. டிக்கெட்டின் விலை இறுதி நாள்களில் உயர்த்தப்பட்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
4. முதல் போட்டியில் இந்திய அணி விளையாடாமல் இருப்பதும் ரசிகர்களின் ஆர்வமின்மைக்கு ஒரு காரணம்.
5. போட்டியானது ஹாட் ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதும் ரசிகர்கள் நேரடியாக வராமல் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம்.
6. இந்த ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம், போட்டி அட்டவணையைத் தாமதமாக வெளியிட்டதும் குறையாகக் கூறப்படுகிறது.
உலகக் கோப்பையைக் காணவரும் பார்வையாளர்களுக்கு மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.