சிஎஸ்கே அணி twitter/Chennai super kings official page
விளையாட்டு

இந்த சொத்த டீமை வெச்சிட்டு பைனலா? எப்புட்ரா? : தோனி மேஜிக்!

Staff Writer

கடந்த முறை நடந்த ஐபிஎல்லில் அடிமேல் அடிவாங்கி அடிமட்டத்தில் கிடந்த சிஎஸ்கே அணி இப்போது இறுதிப்போட்டிக்கு நுழையும் முதல் அணி ஆகிவிட்டது!

எந்த அணியிலும் ஜொலிக்காமல் இந்திய அணியிலிருந்தும் கழற்றிவிடப்பட்டிருந்த ரஹானேவை வாங்கியபோது, ஏண்டா இந்த வீண் வேலை என்று பார்த்தார்கள். செத்த பாம்புக்கெல்லாம் உயிர்கொடுப்பாண்டா எங்க தல.. என்கிற மாதிரி, தன் பழைய அணியான கேகேஆருக்கு எதிரான ஒரு  போட்டியில் ரஹானே அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்தன.

இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸை எடுத்தது பெரிய பலமாகக் கருதப்பட்டது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட இரு ஆட்டங்களில் அவர் ஜொலிக்க வில்லை. அதன் பின்னர் அவர் தேவைப்படவும்  இல்லை என்கிற அளவுக்கு உள்ளே வந்த ரஹானே பங்களித்தார்.

கான்வே என்கிற நியூசிலாந்து விக்கெட் கீப்பரை எடுத்து தட்டிக்கொடுத்து, நீதாண்டா எங்களோட் ஆடுத்த பாப் டு ப்ளெஸி என்று கொண்டுவந்ததில் ஓப்பனிங் இறங்கி நங்கூரமாக நின்றார் அவர். ஒட்டு மொத்த தொடரிலும் கான்வேயை அவுட் ஆக்க எதிரணியினர் தண்ணி குடித்தார்கள். இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்காக ஜிடி அணியுடன் மோதியபோது, கான்வேக்கு பந்து மட்டையில் படவே இல்லை. தன்னைத் தானே அவுட் ஆக்கிக்கொள்ள கான்வே முயன்றும் முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பத்திரனா என்ற 20 வயது பையனை போன முறை எடுத்தபோது அவர் ஜொலிக்கவில்லை. ஆனாலும் ப்ராவோ போன்ற டெத் ஓவர் பந்துவீச்சாளர் ஓய்வு பெற்ற நிலையில் அவரது இடத்தை நிரப்ப பத்திரனாவுக்கு பயிற்சியும் தன்னம்பிக்கையும் கொடுத்ததன் விளைவு, மலிங்காபோல பந்துவீசும் பத்திரனா பத்து ஓவருக்குப் பிறகுதான் வருவார். அவரது வேகமும் கூர்மையான பந்துகளும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துவிட்டன. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார் இந்த இளைஞர்! அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இப்போது இருக்கும் ப்ராவோ, நேற்றைய போட்டியின் முடிவில் துள்ளிக் குதித்து உள்ளே ஓடியதில் ஆச்சரியமே இல்லை!

மகேஷ் தீட்சணா, ஜடேஜா, மொயீன் அலி போன்ற மூன்று சுழலர்களையும் வைத்துக்கொண்டு, டோனி செய்திருக்கும் ’மிடில் ஓவர் கழுத்து நெரிப்பு’ சிஎஸ்கே அணியின் அடையாளமாகவே ஆகிவிட்டது!

தீபக் சஹார் தான் சிஎஸ்கேவுக்கு ஸ்டார். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் காயம் ஆகிவிட்டது. ஜேமிசன், முகேஷ் சௌவுதிரி, சிசாண்டா மகலா போன்ற வீரர்களும் காயத்தால் ஆடமுடியாத நிலை. இந்நிலையில் ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே, ராஜ்யவர்தன் போன்ற ஆட்களை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்திருப்பதே ஆச்சர்யம்!

பதினாறு கோடிக்கு எடுத்த பென்ஸ்டோக்ஸ் பெஞ்சில் அமைர்ந்திருக்க, 20 லட்சத்துக்கு எடுத்த பத்திரனா பட்டையைக் கிளப்பினார்! இதுதான் சிஎஸ்கே வெற்றியின் ஒன் லைன்!

அப்ப தோனி? இந்த ஒன்லைனை எழுதியதே தலைவன் தோனி தாங்க!