சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி 
விளையாட்டு

பிறந்தநாள் ஸ்பெஷல்: சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

Staff Writer

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் (49) அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி இன்று சமன் செய்துள்ளார்.

விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளான இன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 40 ரன்களும், சுப்மன் கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்தனர்.

நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் 77 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து ஆடவந்த கே.எல்.ராகுல் 8 ரன்னிலும், சூர்யகுமார் 22 ரன்னில் அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

அதேபோல், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.