பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த மோனா அகர்வாலுவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பாராலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்திய வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.