ரவிச்சந்திர அஸ்வின், நடராஜ் 
விளையாட்டு

இந்தி படிக்கச் சொல்லும் அஸ்வின், நட்டு! எங்க வந்து என்ன பேசறீங்க?

Staff Writer

‘இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன்… தயக்கம் இன்றி கற்றுக் கொள்ளுங்கள்’ என்று கிரிக்கெட் வீரர் நடராஜனும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தித் திணிப்பு கூடாது என தமிழ்நாடு மிக நீண்டகாலமாகப் போராடி வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் இதுவே நிலைப்பாடாகவும் இருந்துவருகிறது. இதனிடையே, அவ்வப்போது ’இந்தியைத் திணிக்க முயல்வதா’ என மைய அரசுக்கு எதிர்ப்பும் தொடர்ந்துவருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன் இருவரும் இந்தி தெரியாமல் தாங்கள் பட்ட கஷ்டத்தை இரு வேறு தருணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். இவர் தனது வாழ்க்கைப் பயணத்தை `I Have the Streets - A Kutti Cricket Story' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்துக்கான அறிமுகக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய அஸ்வின், ”சிறு வயதில் எனக்குப் பெரிதாக இந்தி தெரியாது. பாக்யராஜின் 'ரகு தாத்தா' இந்திதான் தெரியும். ஆனால், ’இந்தி தெரியாது போடா’ என்பதைவிட ஹிந்தியே தெரியாது; அதைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கஷ்டம்தான் கொடுக்கும்' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோமானால் சிறப்பாக இருக்கும்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் இருந்தபோது இந்தி தெரியாமல் ஆங்கிலத்தில் பேசிய என்னை ஐன்ஸ்டீனைப்போலப் பார்த்தார்கள். ஐன்ஸ்டீனை அவர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதை அறியவே எனக்கு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. " என்று அஸ்வின் பேசியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து இப்போது வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும், இந்தியைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடராஜனிடம், ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது இருந்த அனுபவம் பற்றி மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நடராஜன், “தமிழைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது; அங்கு முழுசா இந்திதான்; ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. தனியா இருக்கிற மாதிரி ஃபீல் இருந்துச்சு. தொடக்கத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். கஷ்டங்களைத் தாண்டி விளையாடுவேன்; இதெல்லாம் ஒரு பிரச்னைனு நினைத்து ஒதுங்கி இருந்தால் எதுவும் செய்திருக்க முடியாது.

எனக்கு சேவாக் சார் ரொம்ப சப்போர்ட் பண்ணினார். ஐ.பி.எல். போட்டிகளில் காயம் ஏற்பட்ட போது, நீ மொதல்ல பேமிலியைப் பாருனு மோட்டிவேட் பண்ணுவாரு. தப்போ ரைட்டோ நிறைய பேச ஆரம்பிங்க. அப்பதான் அந்தப் பழக்கம் வரும். நானும் அதுக்கப்புறம்தான் பேச ஆரம்பிச்சேன். ஆனா, ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன்." என்று பதிலாகக் கூறியிருந்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு தி.மு.க. மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி எதிர்வினையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், “எங்களுக்கு எப்பவும் நீங்கள் எங்கள் தங்கராசு நடராஜன்தான்! அவாளுக்கு நீங்க எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு… நட்டுதான்!

ஆனால் பாருங்க தல, ஐபிஎல் விளையாட வருகிற கம்மின்ஸ், சுனில் நரேன், ஹெட், பட்லர், சால்டு இவர்கள் எல்லாம் எந்தப் பள்ளியில் இந்தி படித்தார்கள்... தெரியவில்லையே???

உங்களுக்கு இந்தி தெரியாதனாலதான் உங்களை இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வு பண்ணல... அப்படித்தானே???

சரி... சரி… விடுங்க…

ஒரே கேள்வி தான் உங்களிடம்…

சேலத்தில் அடகுக்கடை வைத்திருக்கும் நம்ம சேட்டுக்கு இந்தி நல்லா தெரியுமே, ஏன் அவரு ஐ.பி.எல். விளையாடல?” என்று ராஜீவ்காந்தி கிண்டலும் கேலியுமாகப் பதிவிட்டுள்ளார்.

வலைவாசிகள் இதைவைத்து ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது இன்றைக்குத் தீனிபோல!

ஆழமான கட்டுரைகள், சுவாரசியமான செய்திகளுக்கு அந்திமழையை வாசியுங்கள்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின் தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram