சிறந்த போட்டியாளர்களுக்கான ‘அா்ஜுனா விருது’, கிரிக்கெட் வீரா் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உட்பட 26 வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று வழங்கினார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விளையாட்டுத் துறையில் மிக உயரியதான ‘மேஜா் தியான்சந்த் கேல் ரத்னா விருது’, பாட்மின்டன் வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த போட்டியாளர்களுக்கான ‘அர்ஜுனா விருது’, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 82-ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்த தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அவரது சகோதரரும், செஸ் போட்டியாளருமான ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு அா்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அா்ஜுனா விருது பெறும் வைஷாலி (செஸ்), துரோணாச்சாரியா் விருது பெறும் ஆா்.பி.ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகர் (மல்லா்கம்பம்), துரோணாச்சாரியா் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பாஸ்கரன் (கபடி), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.