முக்தேந்திரா 
செய்திகள்

யு.பி.எஸ்.சி தேர்ச்சி பெற்ற தலித் தொழிலாளியின் மகன்: உ.பி.யில் ஒரு பாஸிட்டிவ் ஸ்டோரி!

மு.வி.நந்தினி

“ஒரு நாள், ஓடு வேய்ந்த எங்கள் வீடு மழையில் ஒழுக ஆரம்பித்தது. ஒழுகும் இடங்களில் அம்மா பாத்திரங்களை பரப்பி வைத்திருந்தார். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென அப்போது தீர்மானித்தேன்” என தனக்கு உந்துதல் தந்த அந்த நாளை நினைவுகூர்கிறார் முக்தேந்திரா. இவர் யு.பி.எஸ்.சி தேர்வில் 814ஆம் இடத்தைப் பிடித்து தேர்ச்சியடைந்துள்ளவர். ஐ.ஆர்.எஸ் பணிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

உத்தர பிரதேசம் என்றாலே ஏழ்மை, வறுமை, மதக்கலவரம், சாதி ஒடுக்குமுறை, ரவுடிகள் ராஜ்ஜியம், என்கவுண்டர் இந்த விஷயங்கள்தான் செய்திகளை ஆக்கிரமித்திருக்கும். இந்தியாவின் பின்தங்கிய மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிற்போக்குத்தனங்களுக்கு பஞ்சமேயில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தலித் மக்களின் வாழ்க்கை நிலை, துயர் மிகுந்தது.

இத்தகைய பின்னணியில் படிப்பு மட்டுமே தம்மை உயர்த்தும் என்ற திராவிட மாடலின் அடிப்படையை உணர்ந்து, அதில் வென்றும் காட்டியிருக்கிறார் முக்தேந்திர குமார் என்ற 23 இளைஞர்!

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் சையதுபூர் என்ற ஊரைச் சேர்ந்த தலித் தொழிலாளி சதிஷ் - கவிதா தம்பதியின் மூத்த மகன் முக்தேந்திரா. ஒரு தங்கை, ஒரு தம்பியுடன் ஐவர் அடங்கிய அந்தக் குடும்பம், ஓர் அறை கொண்ட, மழை வந்தால் ஒழுகும் வீட்டில் வசிக்கின்றனர்.

பழைய மர பெஞ்சில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, தனது அடுத்த கட்ட முயற்சிகள் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார் முக்தேந்திரா. த பிரிண்ட் இணையதளத்துக்கு கொடுத்த பிரத்யேக நேர்காணலில்,

“நான் என் வாழ்நாளில் இவ்வளவு இனிப்புகளை ஒரே நேரத்தில் உண்டதில்லை. என்னை வாழ்த்த வருகிறவர்களை நான் முன்பின் பார்த்ததில்லை” என தனது வாழ்வில் கல்வி ஏற்படுத்திய மாற்றத்தினை நெகிழ்வோடு பகிர்கிறார்.

குடும்பத்தினருடன் முக்தேந்திரா

“ஏழ்மையை அகற்றுவது மிக முக்கியமானது. நாங்கள் கடந்துவந்த பாதை மிகவும் கடினமானது. பிந்தங்கிய மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். அதுபோல பெண்களுக்கும். நான் பணியில் சேர்ந்தவுடன் நிறைய செய்ய வேண்டும். எனக்கு ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் பற்றி மட்டுமே தெரியும். யு.பி.எஸ்.சி பற்றி தெரிந்தவுடன் அதை இலக்காக்கிக் கொண்டேன்” என்கிறார்.

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்க புத்தகங்கள், கோச்சிங் என நிறைய செலவாகுமே?

“கோச்சிங் வகுப்புகளுக்கு நிச்சயம் செல்ல முடியாது. யூடியூப் வீடியோக்கள், நூலகங்கள், இலவச கோச்சிங் வகுப்புகள் மூலம்தான் படித்து தேர்வுக்குத் தயாரானேன். கல்லூரியில் கிடைத்த ஏழாயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் பணத்தில்தான் தேவையான புத்தகங்கள் வாங்கினேன்.” என்கிற முக்தேந்திரா தன்னுடைய வெற்றிக்கு தன் பெற்றோரே காரணம் என கலங்குகிறார்.

“எங்கள் மகன் எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். எங்களிடம் பேசாதவர்கள்கூட இன்று வந்து வாழ்த்திவிட்டு போகிறார்கள்” என்கிறார் முக்தேந்திராவின் தந்தை சதீஸ்.

“நான் வெற்றி பெற்றதில் உண்மையில் மகிழ்ச்சி. ஆனால் என் இலக்கு ஐ.ஏ.எஸ் ஆவதுதான்” என உத்தர பிரதேசத்திலிருந்து பாஸிட்டிவ் செய்தி சொல்லும் இந்த இளைஞர்.

வாழ்த்துகள் ஆஃபிஸர்!