இணைய மோசடிகள் freepik
செய்திகள்

மணமகள் போர்வையில் மென்பொறியாளரிடம் ரூ.1.1 கோடிக்கு மேல் ஆட்டையைப் போட்ட இளம் பெண்!

Staff Writer

‘இப்படியெல்லாமா பணம் பறிப்பாங்க?’ என்ற கேள்வி இந்த செய்தியைப் படிக்கும் போது உங்களுக்கு எழலாம்! திருமண ஆசையில், இளம்பெண்ணின் நூதன மோசடியால் ரூ. 1 கோடிக்கு மேலுக்கு இழந்திருக்கிறார் ஒரு மென்பொறியாளர்.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சன்னி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இங்கிலாந்தில் மென்பொறியாளராக வேலைப் பார்த்து வருகிறார். அவருக்கு வயது 41. தொழில்முறை பயிற்சிக்காக பெங்களூருவிற்கு வந்திருந்த அவர், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில், ஒரு மெட்ரிமோனி தளத்தில் தன்னுடைய விவரங்களைப் பதிவு செய்து, பொருத்தமான பெண் தேடிவந்துள்ளார்.

அந்த மெட்ரிமோனி தளத்தின் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமாயுள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்த அந்த பெண், தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாகவும், தற்போது தானும், அம்மாவும் மட்டுமே ஒன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

கடந்த ஜூலை2 ஆம் தேதி, தன்னுடைய அம்மாவின் அவசர மருத்துவ தேவைக்காக ரூ.1500 வேண்டும் என பொறியாளரிடம் கேட்டு பெற்றுள்ளார். மீண்டும், ஜூலை 4ஆம் தேதி இரவு 12 மணிக்கு பொறியாளரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ஆடையில்லாமல் தோன்றி, அவருடன் ஆபாசமாக உரையாடியிருக்கிறார்.

அந்த உரையாடலை பொறியாளருக்கு தெரியாமல் தனது போனில் பதிவு செய்து கொண்டுள்ளார் அந்த பெண். பிறகு, அந்த வீடியோ பதிவை பொறியாளருக்கு அனுப்பி, அவரின் பெற்றோருக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால், ஒரு பெரும்தொகை வேண்டும் என கேட்டு அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன அந்த பொறியாளர், ரூ. 1 கோடியே 14 லட்சத்தை அந்த பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். அந்தப் பெண் தொடர்ந்து மிரட்டவே, பொறியாளர் காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை அப்பெண்ணை தேடிவருகிறது.

மொத்த தொகையில் சுமார் ரூ.30 லட்சம் வரை அப்பெண் ஏற்கனவே செலவழித்து விட்டதாகவும், மீதம் உள்ள சுமார் ரூ.84 லட்சம் மீட்கும் முயற்சியில் அப்பெண்ணின் வங்கி கணக்கை முடக்கி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒருவரை நேரில் சந்தித்து முழு விவரங்களும் அறியாமல் அலைபேசியிலேயே பேசி, இதுபோன்ற தொடர்புகளை வளர்த்து கொள்வதோ, பண பரிவர்த்தனைக்காக நம்புவதோ தவிர்க்கப்பட வேண்டும். மறுமுனையில் பேசுபவரின் நடவடிக்கைகள் சரியில்லையென்றாலும் உடனே தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.