பாரதமாதா சிலை அகற்றும் பணியில் காவல் துறையினர் 
செய்திகள்

பாஜக அலுவலகத்திலிருந்து பாரதமாதா சிலை அகற்றம்!- கொந்தளிக்கும் பாஜகவினர்

Staff Writer

விருதுநகர் பாஜக மாவட்ட அலுவலகத்திலிருந்த பாரதமாதா சிலையை, வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் இரவோடு இரவாக அகற்றிய சம்பவம் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட பாஜக அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த வளாகத்திற்குள் நேற்று மாலை பாரத மாதா சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதை அறிந்த வருவாய்த் துறையினர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனால், பாஜகவினர் அதற்கு உடன்படவில்லை என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, நேற்றிரவு பாஜக அலுவலக வளாகத்துக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு நிறுவப்பட்டிருந்த பாரத மாதா சிலையை அகற்றினர். தகவல் அறிந்த பாஜகவினர் ஏராளமாக திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சர்ச்சை சம்பவம் தொடர்பாக விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை.

பாரத அன்னையின் புகழ் ஓங்குக!” என பதிவிட்டுள்ளார்.