தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிக்கு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அடிவயிற்றில் சற்று வீக்கம் ஏற்பட்டு வலியும் இருந்து வந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்து வந்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று இரவு, ரஜினிக்கு லேசான நெஞ்சு வலி மற்றும் அடிவயிறுவீக்கம் காரணமாக இரவு 10 மணியளவில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடி யாக இசிஜி எக்கோ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்திலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவருக்கு சிறுநீரகத்துக்கும் செல்லும் நரம்பில் சதை வளர்ந்திருப்பதால், அதுதான் வீக்கம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து ரஜினிக்கு இன்று அதிகாலை சிகிச்சை தொடங்கிய நிலையில், சதை வளர்ந்திருக்கும் கிட்னி நரம்புப் பகுதியில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரஜினி தனியறைக்கு மாற்றப்பட்டுள்ள அவர், கண் விழித்ததும் தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ள அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூலி படப்பிடிப்பின்போது தொடர்ந்து மழையில் நனைந்தவாறே படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும் அதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.