ஈரோடு புத்தகக் காட்சி 
செய்திகள்

ஈரோடு புத்தகக் காட்சி விவகாரம் - இன்ஸ்பெக்டர் இட மாற்றம்

Staff Writer

ஈரோட்டில் நடைபெற்றுவரும் புத்தகக்காட்சியில் அத்துமீறியதாகக் குற்றம்சாட்டப்படும் காவல்துறை ஆய்வாளர் சண்முகம் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு வடக்கு ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சண்முகம், பிரச்னை காரணமாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடன் மிரட்டலில் ஈடுபட்டதாக தனிப்பிரிவு காவலர் மெய்யழனை ஆயுதப் படைக்கு மாற்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜவஹர் உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, ஈரோடு புத்தகக்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சில புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என ஆய்வாளரும் காவலரும் மிரட்டினார்கள் என்று பிரச்னை எழுந்தது. மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் எழுதிய ’இந்துத்துவ பாசிசம்: வேர்களும் விழுதுகளும்’, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் ஆகிய நூல்களை காட்சியில் இருந்து அகற்றுமாறு அவர்கள் இருவரும் கூறியதாக அரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

மே பதினேழு இயக்கத்தின் நிமிர் பதிப்பக அரங்குப் பணியாளரை இழுத்துச் செல்ல முயன்றதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணனும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும் இதில் தலையிட்டு, உரிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய கண்டனங்கள் பெருகியதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.