பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எம்.எல்.ஏ அருள் விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார்.
விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு) மற்றும் எஸ்.சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால், பயணியர் மாளிகையில் மனு அளிக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும், இருக்கை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பிய எம்.எல்.ஏ.க்கள் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். விழாவிலிருந்து வெளியேறிய இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஆளுநரின் தனி பாதுகாவலர் சமாதானம் செய்ய முயற்சித்தும் ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறினர்.
இது தொடர்பாக பாமக எம்.எல்.ஏ அருள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பு நேற்றிரவு வரை எனக்கு வரவில்லை. இத்தனைக்கும் எனது மேற்கு தொகுதிக்குள் தான் பல்கலைக்கழகம் இருக்கின்றது. இன்று என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, திடீரென பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டமளிப்பு விழாவுக்கு அவசியம் வரவேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.
எனது தொகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதால் சரி கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்துப் பட்டமளிப்பு விழாவுக்கு சென்றேன். அதேபோல் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவமும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். நாங்கள் இருவரும் சென்ற போது, துணைவேந்தர் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. வேண்டாத விருந்தாளியாக பார்த்தார்.” என விளக்கம் அளித்துள்ளார்.