முன்பெல்லாம், எதாவது ஒரு புத்தகம் எடுத்துப் போகவில்லையென்றாலே வெளுத்துவிடுவார்கள் ஆசிரியர்கள். ஆனால் இப்போது, புத்தக பையே வேண்டாம் என்கிறார்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கு பெற்றோர்களும், கல்வித்துறையினரும் பல புது முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிலொன்று தான் ’நோ பேக் டே’.
புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகளில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆண்டுக்கு பத்து நாட்கள் ‘NO BAG DAY’ கடைப்பிடிக்கவும், மாதந்தோறும் கடைசி வேலை நாளை பையில்லா தினமாகக் கடைப்பிடிக்கவும் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இன்று ஜூலை மாதத்தின் கடை நாள் என்பதால், நோ பேக் டே நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் நோ பேக் டே-யை முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்துள்ளனர்.
புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களுக்கு, அவர்களது திறமையை வளர்க்கும் வண்ணம், கைவினைப் பொருட்கள் செய்தல், வினாடி-வினா போட்டி, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கற்றல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பள்ளிக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வருவார்கள் என்கின்றனர் கல்வியாளர்கள்.
புதுச்சேரி பள்ளிகளில் நோ பேக் டே அமல்படுத்துவதற்கு அம்மாநில முதல்வர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கியமானவர். இன்று அவர் பள்ளிகளுக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.