நிலவில் சந்திராயன் -3 Rocket Gyan
செய்திகள்

நிலவின் தென்துருவ வெப்பநிலை: விக்ரம் லேண்டர் அனுப்பிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ!

Staff Writer

நிலவின் தென்துருவத்தின் சராசரி வெப்பநிலையை பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் மூலம் அனுப்பிய தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவை சுற்றி வந்த சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கலன், கடந்த 23ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

நிலவில் கால் பதித்த, விக்ரம் லேண்டர் தென் துருவத்தில் நகர்ந்து செல்லும் புதிய வீடியோவை நேற்று இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில், நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்த தகவலை லேண்டர் அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், நிலவில் இறங்கிய விக்ரம் லேண்டரில் சென்ற ChaSTE (Chandra's Surface Thermo Physical Experiment)கருவி பணியைத் துவக்கியது. நிலவில் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை ChaSTE ஆய்வு செய்கிறது. நிலவின் மணல் பரப்பில் 10 செ.மீ. ஆழம் வரை ஆராயக்கூடிய திறன் கொண்டுள்ளது. ChaSTE இல் உள்ள 10 சென்சார் கருவிகள் வெப்பநிலையைத் தொடர்ந்து ஆய்வு செய்கிறது. நிலவின் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில், பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்பநிலை மாறுபடுவது தெரியவந்துள்ளது. தென் துருவத்தில் தரையிறங்கிய லேண்டர் ஆய்வு செய்து அனுப்பிய முதல் தகவல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்க, 8 செ.மீ ஆழத்தில், அதன் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கிறது. நிலவில்ஒவ்வொரு செ.மீ ஆழம் செல்ல செல்ல வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது.