கழிவு நீர் அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளி 
செய்திகள்

மலக்குழி மரணங்கள்: மத்திய அரசு தவறான தகவல்களைத் தருகிறதா?

Staff Writer

நாடு முழுவதும் இதுவரை 530 மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அது தவறான தகவல் என சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் என்ற அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

கையால் மலம் அள்ளுதல், அபாயகரமான கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சமூக நீதித்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது, கையால் மலம் அள்ளுதல் அல்லது சாக்கடைகளை சுத்தம் செய்தல் பணியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிரிழப்பு எதுவுமில்லை. பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல் பணியில் ஈடுபட்ட 330 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 306 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 530 மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீகார், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நூறு சதவீதம் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இல்லை என்று அறிவித்துள்ளன.

அனைத்து மாவட்டங்களும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலையில் இருந்து விடுபட்டதாக அறிவிக்க வேண்டும் என்றும், சுகாதாரமற்ற கழிப்பறைகளை கையால் துப்புரவு செய்பவர்களின் தரவுகளை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இருப்பினும், இதுவரை நம்பகமான தரவு எதுவும் பயன்பாட்டில் பதிவேற்றப்படவில்லை.

நாட்டில் உள்ள 236 மாவட்டங்கள் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலையில் இருந்து தாங்கள் விடுபட்டதாக இப்போது வரை அறிவிக்கவில்லை. ஆந்திரா, காஷ்மீர், மத்தியப்பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், ஒடிசா, தெலுங்கானா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்கிறது என்றார்.

சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் அறிக்கை

மத்திய அரசு அளித்துள்ள இந்த விளக்கத்திற்கு சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan) என்ற அமைப்பு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஈடுபட்டதில் இந்த ஆண்டு  9 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இது தவறான தகவல். இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இப்போது வரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஐந்து வருடத்தில் கழிவுநீர் அகற்றுதல் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு 399 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தவறானது. நாட்டில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் இல்லை என இணை அமைச்சர் கூறுகிறார். இது பாதிக்கப்பட்ட மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது. 

சாக்கடை மற்றும் கழிநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க மத்திய அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் தெரியபடுத்த வேண்டும்.

மலக்குழி மரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், 2014இல் அளித்த உத்தரவில், மலக்குழி மரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு 1315 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 266 நபர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு கிடைத்துள்ளது. இழப்பீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கிட்டத்தட்ட 80% பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என கடுமையான விமர்சிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, பாதுகாப்பற்ற சாக்கடைகளை சுத்தம் செய்ய வைத்ததற்காக ஒப்பந்ததாரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 616 வழக்குகளில் ஒரே ஒருவருக்குத்தான் இதுவரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா முழுவதும் துப்புரவு பணியில் ஈடுபடும் 90 % பேர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.