கங்குவா சூர்யா 
செய்திகள்

சூர்யா நடித்துள்ள கங்குவா வெளியிட தடை! – நீதிமன்றம் உத்தரவு

Staff Writer

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை வெளியிட இடைக்காத தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள கங்குவா நாளை மறுநாள் (நவ.14) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கங்குவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற நாளைக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.