ராகுல் காந்தி 
செய்திகள்

பழங்குடிகளை வனவாசிகள் என அழைப்பது அவமானம்!- ராகுல் காட்டம்

Staff Writer

பழங்குடிகளை வனவாசிகள் என அழைத்து அவமானப்படுத்துவதாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மீண்டும் எம்.பி.யாக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். இன்று, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, " வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் எனக்கு துணையாக இருந்தனர். கடினமான காலத்திலும் நீங்கள் எனக்குத் துணையாக இருந்தீர்கள்.” என்றவர், பழங்குடிகளைப் பற்றி பேசத்தொடங்கினார்.

”ஆதிவாசி மாணவ மாணவிகளின் மேற்படிப்புக்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று வன பகுதியில் வீடு கட்டவும் உரிமை பெற்று தரவும் நடவடிக்கை எடுப்பதே எனது குறிக்கோள்.

இந்த மண்ணின் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.

பழங்குடிகளை சிலர் (பா.ஜ.க) 'வனவாசி' என்று அழைக்கிறார்கள். இது அவர்களை அவமானப்படுத்துவதாகும். வனவாசி என்ற சொல், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும். காட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

வனவாசி என்ற சொல் பழங்குடிகளின் வரலாற்றையும் அவர்களின் மரபையும் சிதைக்கிறது. ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்" என்றார்.