வேட்டையன் ரஜினிகாந்த் 
செய்திகள்

என்கவுண்டரை ஆதரிக்கிறாரா ஜெய்பீம் இயக்குநர்?

Staff Writer

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 16 என்கவுண்டர்கள் நடந்திருக்கும் நிலையில், என்கவுண்டருக்கு ஆதரவாக வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்துக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்தின் 170ஆவது படம் ஆகும். ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த. செ. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், டாணா ரகுபதி, மஞ்சு வாரியார் உள்பட பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. இதில் என்கவுண்டருக்கு ஆதரவாக இடம்பெற்றிருந்த வசனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘ஒரு வாரத்துல என்கவுன்டர் பண்ணியே ஆகணும்’ என காவல் துறை உயர் அதிகாரி கூற, ‘தேவையில்ல சார், ஒரு வாரம் ரொம்ப அதிகம், மூணு நாள் போதும்’ என ரஜினி பேசும் பஞ்ச் வசனம் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த நிலையில், வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்டையன் படத்தில் என்கவுண்டர் தொடர்பான வசனங்கள் உள்ளது. இந்த படத்தில் உள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றே விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வேட்டையன் படத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற உள்ளது.

வேட்டையன் படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

என்கவுண்டரை ஆதரிக்கிறாரா ஜெய்பீம் இயக்குநர்?

ஞானவேல்

ஜெய்பீம் படத்தில் காவல் துறையின் மனித உரிமை மீறலை பேசிய இயக்குநர் ஞானவேல், வேட்டையன் படத்தில் என்கவுண்டரை ஆதரிக்கும் வகையில் வசனம் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 16 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் நிலையில், என்கவுண்டரை ஊக்கப்படுத்தும் வகையில் வசனம் வைத்திருப்பதை பலரும் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram